May 15, 2022 தண்டோரா குழு
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மற்றும் ஜெயின் இன்டர்நேஷனல் ட்ரேட் அமைப்பு ஆகியோர் சார்பாக கோவையில் நடைபெற்ற ” ரன் ஃபார் மாம் ” மாரத்தான் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜெயின் இன்டர்நேஷனல் ட்ரேட் ஆர்கனைசேஷன் என்ற உலகலாவிய அமைப்பின் சார்பாக ஜெயின் சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு சமூக நலப் பணிகளை செய்துவருகின்றனர். சுமார் 14300 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பு 11 நாடுகளில் 65 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இதன் கோவை கிளையின் மகளிர் பிரிவு மற்றும் கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை ஆகியோர் சார்பாக ரன் ஃபார் மாம் மாரத்தான் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
தாய்மையைக் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, இயக்குனர் மதுரா பழனிசாமி கோவை மகளிர் அணி பிரிவு தலைவர் பூணம் பாஃப்னா ஆகியோர் தலைமை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக, கோவை டெரியர்ஸ் கமாண்டிங் அதிகாரி கர்னல் சிங் தன்வர் மற்றும் கோவை மாநகர் போக்குவரத்து துணை ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
3,5,10 கிலோ மீட்டர் தூரம் என நடைபெற்ற இதில், சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டப் பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.மருத்துவமனை வளாகத்தில் துவங்கி ஓடிய வீரர்கள்,காளப்பட்டி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வந்தடைந்தனர்.வறுமையான சூழலில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் தினசரி ஒரு கிளாஸ் பாலை வழங்கி வரும் பீப்புள் ஃபார் பீப்புள் அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.