December 30, 2016 தண்டோரா குழு
பிலிப்பின்ஸ் நாட்டில் இரண்டு வெவ்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 39 காயமடைந்தனர்.
இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (டிசம்பர் 29) கூறியதாவது:
பிலிப்பின்ஸ் நாட்டின் மத்திய தீவான லேய்டேவில் உள்ள ஹிலோங்கோஸ் நகரில் குத்துச் சண்டை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அந்த அரங்கில் முதல் வெடிகுண்டு வெடித்தது. அதில் 33 பேர் காயமடைந்தனர்.
முதல் வெடிகுண்டு வெடித்து, சரியாக ஒரு மணிநேரத்தில் பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானோ என்னும் தீவில் நெடுஞ்சாலையில் இரண்டாவது வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
மேலும், தெற்கு மணிலாவில் இருந்து 62௦ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு நகரில் வெடிக்கப்படாத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டுச் சம்பவங்களுக்கு மதத் தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டேவின் சொந்த ஊரான டாவோ அமைந்துள்ள மின்டானோ மாகாணத்தில் பயங்கரவாதிகள் செப்டம்பர் மாதத்தில் நடத்திய தாக்குதலில் 15 உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.