May 20, 2022 தண்டோரா குழு
கோவை,திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் C.சிவக்குமார் கூறியுள்ளதாவது:-
ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும் சலுகைகளும், கடன் உதவிகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் குறுந்தொழில் முனைவோர்களுக்கு கிடைப்பதில் நிறைய இடர்பாடுகள் இருப்பதால், குறுந்தொழில் முனைவோர்களின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக,\”குறுந்தொழில் வளர்ச்சி வங்கி\” தமிழக அரசால் அமைக்கப்பட்டு குறுந்தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் காணப்படும் இட நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காண, கோவை மாவட்டத்தில் உள்ள அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும்.தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் சராசரியாக 14 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
குறுந்தொழில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வட்டியை குறைத்து, ரூபாய் 50 ஆயிரம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு 5 சதவீத வட்டியில் சொத்துப் பிணையமின்றி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வாயிலாக கடனுதவி வழங்கி, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
குறுந்தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சரிசெய்யப்பட குறுந்தொழில் முனைவோர் நல வாரியம் அமைக்கப்பட்டு, தொழில் முனைவோர்களுக்கு வரும் இடர்பாடுகள் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும். மேலும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மருத்துவ காப்பீடு செய்து தரப்பட வேண்டும். தற்பொழுது குறுந்தொழிற்கூடங்கள் ஜாப் ஆர்டர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட்டு வருவதால், தமிழக மின்சார வாரியம், போக்குவரத்து துறை, விவசாயம், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான, இன்ஜினியரிங் சம்பந்தமாக கொள்முதல் செய்கின்ற உதிரி பாகங்களில் 70 சதவீதம் குறுந்தொழில் முனைவோர்களிடமிருந்து தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மூலப்பொருள் வங்கி துவங்கப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு நியாயமான விலையில் மூலப்பொருள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வேலை ஆட்கள் பற்றாக்குறையை போக்கிட, தொழிற்கல்வி முடித்து வெளிவரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தமிழகத்தை சேர்ந்த இளம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மாணவர்களின் திறன் மேம்படவும், வேலை ஆட்கள் பற்றாக்குறையை போக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.