May 20, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் எதிர்வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், கழிவுகளை தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து மற்றும் அடைப்புகளை சரி செய்யும் சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது.
இந்த வாகனம் அதிக நீரேற்று திறன் கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85000 லிட்டர் உறிஞ்சும் திறன் கொண்டது. இவ்வாகனம் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும் அமைப்பினை கொண்டுள்ளது.மழைக்காலத்தில் சாலைகள், சந்திப்புகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி துவங்கியுள்ளது.
மழைக்காலம் தொடங்கும் முன் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து தண்ணீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகள் துவங்கி விட்டன. முதல்கட்டமாக புரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாநகராட்சி முழுவதும் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரப்படும்,’’ என்றார்.