May 27, 2022 தண்டோரா குழு
கோவை மாநகரில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டச் சாலைப்பணியை 19 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட மதிப்பீட்டுக் குழுவினர் அண்மையில் ஆய்வு செய்தனர்.
இந்த உயர்மட்டச் சாலையின் முக்கிய அம்சங்களை கோவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் திட்டங்கள் சரவணன் மதிப்பீட்டுக் குழுவினருக்கு விளக்கினார். இந்த உயர்மட்ட சாலை 10.10கிமீ நீளம் கொண்ட 4வழிச் சாலையாகும்.இதன் அகலம் 17.25மீ ஆகும்.ஆகமொத்தம் சமதளத்தில் 6 வழிப்பாதை, உயர்மட்டத்தில் 4 வழிச்சாலை என 10 வழிப்பாதையாக அவிநாசி சாலை உருமாற உள்ளது.
உயர்மட்டச் சாலையின் உருவ மாதிரியைக் கொண்டு இச்சாலையின் முக்கிய சந்திப்புகளான விமானநிலையம், ஹோப்காலேஜ், நவஇந்தியா மற்றும் அண்ணாசிலை சந்திப்புகளுக்கு அருகே அமையவுள்ள 7மீ அகலம் கொண்ட ஏறுதளங்கள் மற்றும் இறங்கு தளங்களை பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
பின்பு விமான நிலைய சந்திப்பிலிருந்து புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்டச் சாலையின் மேல்தளங்களைப் பற்றி மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் கண்காணிப்புப் பொறியாளரிடம் கேட்டு அறிந்தார். 3மீ மற்றும் 2மீ அகலம் கொண்ட பகுதிகளாக வேறு இடத்தில் கட்டுமான வளாகத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு, பின்பு வேலைத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு மேல் தளங்கள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே போக்குவரத்திற்கு இடையூறுயின்றி மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.இப்பணியின் ஒப்பந்த காலம் 4 வருடங்கள் ஆகும். இப்பணி 29.08.2020-ல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியில் இதுவரை அமைக்கப்பட வேண்டிய 306 துாண்களில் 266 துாண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.கட்டப்பட வேண்டிய 305 மேல் தளங்களில் 20 மேல் தளங்கள் முடிக்கப்பட்டுள்ளன.விமான நிலைய ஏறுதளம் அமைக்கும் பணியில் 6 துாண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.