May 27, 2022
தண்டோரா குழு
தற்போது வெளியாகி உள்ள வாய்தா எனும் திரைப்படத்தில் நீதிபதிகள் , வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக கோவையில் வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய ஜெய் பீம் போன்று தற்போது வெளியாகி உள்ள வாய்தா திரைப்படம் வழக்கறிஞர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.அறிமுக இயக்குனர் மகிவர்மன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம், வாய்தா.
புகழ் மகேந்திரன் நாயகனாக நடிக்க, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாதாரண மக்களுக்கு நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் தரும் அனுபவத்தை வைத்து கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ள வாய்தா திரைப்படம் தற்போது வழக்கறிஞர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கோவையில் வழக்கறிஞராக உள்ள ஜெரோம் ஜோசப் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீதிமன்றம்,நீதிபதி,மற்றும் வழக்கறிஞர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இருப்பதாகவும், இதில் வரும் காட்சிகள் சாதாரண மக்களின் இறுதி நம்பிக்கையாக இருக்கும் நீதி துறையின் மீது உள்ள நல்ல அபிப்ராயத்தை தவறாக காண்பிப்பதாக குறிப்பிட்டார்.இதனால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சிலர் திரைப்படம் தொடர்பான கருத்து தெரிவிக்க ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.