June 2, 2022 தண்டோரா குழு
கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள 627 ஏக்கரில் 134 ஏக்கர் நிலம் பாதுகாப்புத்துறைக்கும், 28 ஏக்கர் மானாவாரி நிலமும் அடங்கும்.இந்த நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு உள்ளன.மீதம் உள்ள நிலங்களை கையகப்படுத்த ரூ1,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியதாவது:
தொழில் நகரமான கோவையின் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அவசியம். இதன் காரணமாக அரசு ரூ.1,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில் இருந்து நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு ரூ.800 கோடி வரை நிதி வழங்கப்பட்டு 70 சதவீத நிலங்கள் வரை கையகப்படுத்தப்பட்டுள்ளன.
மீதம் உள்ள நிலங்களை இன்னும் 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றதும், மத்திய விமான ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டு, விமான நிலைய விரிவாக்கம் துவங்கப்படும். இதன் பின்னர் கார்கோ விமானம் உள்பட அனைத்து பெரிய விமானங்களும் கோவையில் தரையிறங்க வசதியாக தேவையான ஓடுதளம் அமைக்கப்படும். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோவைக்கு நேரடி விமான சேவை துவங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.