June 8, 2022
கோவை மேட்டுபாலையம் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த தக்காளி மார்கெட்டை அப்புறப்படுத்த மாநகராட்சி கமிஷனர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சியின் 45ம் வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவை ராமசாமி வீதி, எம்.ஜி.ஆர் மார்க்கெட் மற்றும் அதற்கு பின்புறம் உள்ள மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை குறித்து கேட்டறிந்தார். பேருந்து நிலையத்தில் உட்புறம் இயங்கி வந்த தக்காளி மார்க்கெட்டை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அங்கு செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும், உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து பதிவேடுகளையும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கனூர் பள்ளத்தில் ரூ.49 கோடி மதீப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் ராமசாமி, ஹேமலதா, 45 வது வார்டு கவுன்சிலர் பேபிசுதா ரவி, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.