June 11, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 3,509 இடங்களில் நாளை நடக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் துவங்கியுள்ளது. கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.எனவே, 4-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தற்போது வரை 18 வயதிற்குட்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசியை 27 லட்சத்து 82 ஆயிரத்து 999 நபர்களும், 2-வது தவணை தடுப்பூசியை 25 லட்சத்து 83 ஆயிரத்து 749 நபர்களும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 4 ஆயிரத்து 494 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 76 ஆயிரத்து 531 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 44 ஆயிரத்து 302 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை (12ம் தேதி) சிறப்பு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி, கிராமப்புறங்களில் 2,304 முகாம்கள், மாநகராட்சி பகுதியில் 950 முகாம்கள், நகராட்சிப்பகுதிகளில் 225 முகாம்கள் என மொத்தம் 3,509 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் coimbatore.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.