June 13, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ரூ.779 கோடியில் பில்லூர் குடிநீர் திட்டம் 3 செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி. அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. 3வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில் 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.
இந்த பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன,’’ என்றார்.