June 16, 2022
தண்டோரா குழு
கோவை மாநகரில் இரவு நேரங்களில் கார்கள், வேன்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களை உணவகங்களாக மாற்றி, அதில் சிலிண்டர்களை பயன்படுத்தி உணவுகள் தயாரித்து விற்பனை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக,கோவையில் டைடல் பார்க் சாலை, அவிநாசி சாலை,சிட்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் மோட்டார் வாகன விதிகளை மீறி, உரிய அனுமதி இன்றி வாகனங்களை கடைகளாக மாற்றி உணவு தயாரித்து விற்பது அதிகரித்துள்ளது.
இதனை அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களில் சிலிண்டர்களை வைத்து, பாதுகாப்பின்றி உணவு தயாரித்ததாக அன்மையில் சில வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் அனுமதியின்றி சிலிண்டர்களை பயன்படுத்தி உணவு தயாரிப்பதைத் தடுக்க மோட்டார் ஆய்வாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘
வாகனங்களில் அனுமதியின்றி சிலிண்டர்களை பயன்படுத்தி உணவு தயாரிப்பதால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உரிய அனுமதியும், பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாத வாகனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்யப்படும்,’’ என்றார்.