June 16, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாவட்டத்தின் 4-வது அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் உட்கோட்டத்தில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் தொடர்பான புகார்களுக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒரு வருடத்தில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மொத்தம் 1200 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 44 சதவீதம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய உட்கோட்டத்திற்கு தொடர்புடையதாகும்.
மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதியில் சுமார் 5,77,613 மக்கள் தொகை உள்ளது. மேலும் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் இருந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமானது சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைவிலிருந்து புகார் கொடுக்க வர வேண்டி உள்ளது.
தற்போது பொதுமக்கள் வசதிக்காகவும், மக்கள் பயன்பெறும் வகையிலும் தங்களது பிரச்சினைகளை உடனுக்குடன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க இன்று முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் மேட்டுப்பாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தற்போது சிறுமுகை இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இம்மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் லதா, மாரி செலின், பிரேமலதா, ஜோதி, ஸ்வேதா,இந்து பிரியா, ஜெபிஷா மற்றும் சுஷ்மிதா ஆகியோர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.