June 17, 2022
தண்டோரா குழு
நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை இடித்த உத்தரபிரதேச அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி,உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட்,மேற்குவங்க மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் வீடுகளை அம்மாநில அரசு இடித்துள்ளது.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவின் நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,வீடுகளை இடித்த உ.பி.அரசை கண்டித்து கண்டன கோஷங்களையிட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு நிலவியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.