December 31, 2016 தண்டோரா குழு
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாதில் சனிக்கிழமை நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து பாக்தாத் காவல் துறை அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய பாக்தாதில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த ஒரு சந்தையில் திடீரென்று இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பல கடைகள் நொறுங்கி விழுந்தன. பொருள்கள் வாங்க வந்திருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இச்சம்பவத்துக்கு மனித வெடிகுண்டு தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று தகவல் கூறுகிறது. இந்தத் தகவல் குறித்தும் இச்சம்பவத்தைக் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.