June 29, 2022 தண்டோரா குழு
கோவை சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்துக்குள் செல்போன் மற்றும் பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை சிறைக்காவலர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் சிறை வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை சிலர் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் சோதனை நடத்தினர்.
அவர்கள் கைதிகள் உள்ள அறை, கழிவறை மற்றும் அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். இன்று காலை 6 மணி முதல் சில மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. போலீசாரின் இந்த திடீர் சோதனையால் சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.