July 5, 2022 தண்டோரா குழு
கோவையில் தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் நடைபெற்ற சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து பட்டினப்பெருமானை வழிபட்டனர்.
தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித்திருமஞ்சனம் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுக மக்கள் இந்த நாற்று நடும் நிகழ்வை விழாவாக கொண்டாடுவது வழக்கம். மேலை சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் பெருமான் பச்சைநாயகியும் உழவன், உழத்தியாக உருக்கொண்டு இறைவனே நாற்று நட்டு விவசாயம் செய்ததாக ஐதிகம்.
இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த வாரம் துவங்கிய இவ்விழாவின் 9ம் நாளான இன்று நாற்று நடும் திருவிழா இச்சமுகத்தின் நான்கு வம்ச பட்டக்காரர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக மக்கள் முன்னேற்ற இயக்கத்தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாற்று நட்டு மகிழ்ந்தார்.
முன்னதாக, தேவேந்திர குல சமூக மடத்திலிருந்து ஏர் மற்றும் ஏர்பூட்டிய மாடுகளை அலங்காரம் செய்யப்பட்டு, பட்டிப்பெருமான் முன்னிலையில் நாற்றுக்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பி.கே.என் பிரபு குமார் சோழர் வம்சம்படாடக்காரர்,. கிருஷ்ணன் பட்டக்கார், மசிலமாணிபட்டக்கார், ராதாகிருஷ்ணன் பட்டக்கார் ஆகிய நான்கு வம்ச பட்டக்காரர்கள் இணைந்து ஏர் உழுது நாற்று நடும் நிகழ்வை துவக்கி வைத்தனர்.
கூடியிருந்த மக்களுக்கு நாற்றுக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, பின்னர் அப்பகுதியில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாற்று நட்டு வழிபட்டனர்.