July 13, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு பொருட்காட்சி கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி துவங்கப்பட்டது.
இப்பொருட்காட்சியில் செய்தி – மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச் சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர 4 அரசு சார்பு துறை அரங்குகள் என மொத்தம் 31 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களை காட்சிப்படுத்தும் வகையிலும் சிறப்பான அரங்குகளை அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல் பொருட்காட்சியை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப்பொருட்களும், பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஞாயிறன்று இப்பொருட்காட்சிக்கு 6617 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதனர். இதில் ரூ.1.62 லட்சம் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. அதே போல் கடந்த 27 நாட்களில் 1.62 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.23 லட்சம் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.