January 2, 2017 தண்டோரா குழு
அதிமுக அரசு மென்மேலும் சிறப்புடன் செயல்பட்டு மக்களின் பேராதரவை பெற்றிட சசிகலா உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தம்பிதுரை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் கழகத் தொண்டர்கள் மத்தியில் சசிகலா ஆற்றிய உரை அனைவரது உள்ளத்தையும் உருகச் செய்வதாக அமைந்திருக்கிறது.
சசிகலா மிகுந்த கண்ணியத்தோடும், கடமை உணர்ச்சியோடும் தனது உரையில் எடுத்துரைத்த கருத்துக்கள், அதிமுகவை சரியான, தகுதியான ஒரு பெருந்தகையின் கையில் ஒப்படைத்து இருக்கிறோம் என்ற மன நிம்மதி அளித்துள்ளது.
27 ஆண்டுகள் கழகப் பொதுச் செயலாளராக மகத்தான பணிகளை ஆற்றிய ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்த கழகமும், தொண்டர்களும் என்ன ஆவார்களோ என்று கலங்கியிருந்த வேளையில், கலங்கரை விளக்கமாய் சசிகலா திகழ்கிறார்.
கட்சித் தலைமையையும், ஆட்சி அதிகாரமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் ஜெயலலிதா விட்டுச் சென்ற கழகப் பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் அவர் எதிர்பார்த்தபடி செய்ய இயலும் என்பது எல்லோருடைய திடமான எண்ணமாகும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க நாடு இருக்கும் சூழலில் அதிமுக அரசு மென்மேலும் சிறப்புடன் செயல்பட்டு மக்களின் பேராதரவை, எம்ஜிஆர், ஜெயலலிதா பெற்றிருந்ததைப் போல தொடர்ந்து பெற்றிட சசிகலா உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும்.
என்னைப் போன்ற கழகத் தொண்டர்களின் மனநிலைய ஏற்று, விரைவில் சசிகலா தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் .இவ்வாறு தம்பிதுரை தெரிவித்துள்ளார்.