January 2, 2017 தண்டோரா குழு
பக்ரைன் நாட்டில் உள்ள ஜு சிறைச்சாலையில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லபட்டார். கைதிகள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து பக்ரைன் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 1) கூறியதாவது:
பக்ரைன் சிறைச்சாலை தாக்குதலால் பல கைதிகள் தப்பித்துச் சென்றுவிட்டனர். எத்தனை பேர் தப்பியுள்ளனர் என்று சரியாக தெரியவில்லை. அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது.
வளைக்குடா நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பாதுகாப்பு படையை தாக்கிய குற்றத்திற்காக ஷியா முஸ்லிம் இனத்தை சேர்ந்த பலர் அந்த சிறைச்சாலையில் உள்ளனர்.
மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல் சலாம் சைப் என்னும் சிறை காவலர் உயிரிழந்தார்.
சிறையில் உள்ள குற்றவாளிகளை அவர்களுடைய குடும்பத்தினர் சந்திக்கும் நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது . இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். விரைவில் தப்பிய கைதிகளை சிறையில் அடைப்பார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.