July 16, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து கோவை மாநகரின் மிகப்பெரிய மியாவாக்கி நகர்ப்புற வனப்பகுதியை உருவாக்கும் முயற்சியில் வேகூல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் 20,000 சதுர அடி நிலப்பரப்பில்,கோவை மண்ணிற்கு ஏற்ற 80 வகைகளைச் சேர்ந்த 7,000க்கும் அதிகமான மரக்கன்றுகள் வளர்க்கப்படவுள்ளன. இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் வேளாண்-தொழில்நுட்ப பெரு நிறுவனங்களுள் ஒன்றான வேகூல் புட்ஸ்,இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற தனது குறிக்கோளை முன்னெடுக்கும் வகையில் கோவையில் மிகப்பெரிய மியாவாக்கி நகர்ப்புற வன உருவாக்கத் திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.
இச்செயல்திட்ட தொடக்க விழாவில், கோயம்புத்தூர் கோட்டத்தின், மாவட்ட வன அதிகாரி டி.கே அசோக் குமார்,வேகூல் புட்ஸ்-ன் நீடிப்புத்திறன் பிரிவு தலைவர் ஶ்ரீநிதி எஸ். ராவ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு மியாவாக்கி வனத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து வேகூல் புட்ஸ்-ன் நீடிப்புத்திறன் பிரிவு தலைவர் ஶ்ரீநிதி எஸ். ராவ் பேசுகையில்,
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உமிழ்வுகளை வெளியிடாத நிறுவனமாக ஆகவேண்டும் என்ற வேகூல்-ன் தொலைநோக்கு திட்டமாகும். இக்குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் துரிதமாக கொண்டிருக்கிறோம். கோயம்புத்தூர் மாநகரில் எங்களது மியாவாக்கி செயல்திட்டத்தின் மீதான பணியை இன்று தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இப்பிராந்தியத்தில் பசுமைப்போர்வை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை எமது முயற்சிகள் அதிகரிக்கும். அத்துடன், பருவநிலை நடவடிக்கைக்கான இலக்குகளை நாங்கள் எட்டுவதற்கும் இது உதவும் என்று கூறினார்.