July 21, 2022 தண்டோரா குழு
அதிமுக அலுவலகத்தில் சீல் வைத்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் நடைபெற்று வந்த வேலையில் கடந்த 11ம் தேதி சென்னை ராயபேட்டை பகுதியில் உள்ள கதவுகளை வருவாய் துறை மூடி சீல் வைத்தது. அதனையடுத்து அதிமுக அலுவலகம் காவல்துறை கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களுமான அம்மன் கே.அர்ஜுனன், கே.ஆர். ஜெயராம் உட்பட தொண்டர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன்,
இந்நிகழ்வு தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளதாகவும். இனி தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர் வெற்றிகள் கிட்டும் எனவும் “வெற்றி மீது வெற்றி வந்து எடப்பாடியாரை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் பொதுச் செயலாளரை சேரும்” மேலும் இந்த தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார்.