July 22, 2022 தண்டோரா குழு
கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட தமிழக அரசின் கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டத்தில் மானிய உதவி பெற்று தொழிலை சீரமைக்க கலெக்டர் சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன மயமாக்குதலுக்காகவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், கூடுதல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு உதவி புரியும் வகையிலும் தமிழக அரசு “கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் புதிதாக நிறுவியுள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியமாக பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற 23.03.2020க்குப் பின்னர் தங்களது நிறுவனத்தை நவீனமயமாக்கல் அல்லது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெறும். கோவை மாவட்டத்தின் எப்பகுதியிலும் அமைந்துள்ள அனைத்து விதமான உற்பத்தி தொழில் நடவடிக்கையையும் மேற்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தகுதி வாய்ந்தவையாக கருதப்படும்.
இத்திட்டம் ஓராண்டு (2022-2023) வரை மட்டும் நடைமுறையில் இருக்கும்.
எனவே, கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் தகுதியுடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்று பயனடைய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோவை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.