July 25, 2022 தண்டோரா குழு
9 மணி நேரம் தொடர்ந்து இரு கைகளிலும் சுருள் வாள் மற்றும் சிலம்பம் சுற்றி கோவை முல்லை தற்காப்பு பயிற்சி கழகத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் அசத்தியுள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டி மற்றும் சேரன் மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் 5 வயது முதல் அனைத்து வயது மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரப்படுகிறது.
சிலம்பம் அடிமுறை ,வேல்கம்பு மான்கொம்பு , சுருள் வாள் , வாள் வீச்சு, வளரி, போன்ற ஆயுதப் பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத்தரப்படுவதுடன்,அவர்கள் இதே கலைகளில் உலக சோதனை புரியவும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்..
மேலும் இங்கு பயின்ற மாணவர்கள் மாவட்டம் முதல் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு கொண்டு பல பதக்கங்களை வென்று உள்ளனர். இந்நிலையில், சரவணம்பட்டி, காபி கடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், தாரணி ஆகியோரின் மகன் விமலேஷ்…ஒன்பது வயதான இவர், கோவை முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கலை கழகத்தில் சுருள் வாள் மற்றும் சிலம்பம் சுற்றுவதை முறையாக பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் இதில் உலக சாதனை புரிய விரும்பிய விமலேஷ், தொடர்ந்து ஒன்பது மணி நேரம் தனது ஒரு கையில் சுருள் வாள், இன்னொரு கையில் சிலம்பம் என இரண்டு கைகளிலும் காலை 5 மணி முதல் மதியம் 2 மணிவரை தொடர்ந்து சுற்றி நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.காலை ஐந்து மணி முதல் தொடர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிறுவனை, முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தின் பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ், மேலாளர் கார்த்திக், ,மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.
சாதனை மாணவன் விமலேஷிற்கு, நோபள் உலக சாதனை புத்தகத்தின் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை, அதன் சி.ஓ.ஓ.வினோத், தீர்ப்பாளர் பரத்குமார் ஆகியோர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.