July 26, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம்,முழுவதும் குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக குட்கா பொருட்களை மொத்தமாக குடோன்களில் பதுக்கி வைத்து, சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைப்பவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து ஆய்வாளர் ராஜதுறை, உதவி ஆய்வாளர் உதயச்சந்திரன், தலைமையிலான போலீஸார் வாகராயம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த ஒரு குடோனில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பிடித்து விசாரித்த போது அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்குமார் (40), ரஞ்சித்குமார் (26), சோகராம் (22), மாதராம் (30), மற்றும் தீபாராம் (27) என்பதும், குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அதை சட்டவிரோதமாக சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த சுமார் 354 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.