January 2, 2017 தண்டோரா குழு
கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய பணிகளை விரைந்து தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரில் காந்திபுரத்தில் நகரப் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், மாநில அரசுப் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் என நான்கு நிலையங்களும், புறநகர் பகுதியில் உக்கடம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என இரு முக்கியமான பேருந்து நிலையங்களும் உள்ளன.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என சொல்லக்கூடிய தொழில் நகரமான கோவையில் ஆயிரக்கணக்கான வாகனங்களால் போக்குவரத்து நேரிசல் ஏற்படுகிறது. இந்த நெருக்கடியைக் குறைக்க கோவை புறநகர் பகுதியில் மேற்கண்ட பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக ரூ.125 கோடி செலவில் இந்தத் திட்டத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்திற்காக கோவை மாநகராட்சி சார்பில் வெள்ளலூர் -செட்டிப்பாளையம் பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது .
இதற்கான கட்டுமானப் பணி சென்னை தனியார் பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியானது.
இந்த உத்தேச பேருந்து நிலையத்தில் வெளியூர், நகர பேருந்துகளின் வழித்தடங்கள், ஆம்னி வழித்தடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், பொது நடைபாதை உள்பட உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறும். இது தவிர விடுதிகள், பயணிகள் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறை, பேருந்து நிறுத்தும் பகுதி உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.
இந்தத் திட்டம் குறித்த விவரங்களை கோவை மாநகராட்சி ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்து, நிதி ஒதுக்கியதும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் த. ஆரோக்கியசாமி கூறியதாவது:
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரம் விளங்குகிறது. மக்கள் தொகையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் மிகவும் முக்கியமானது என்று கோவை மக்கள் கருதுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்குப் பணிபுரிய வருகின்றனர். தென் மாவட்டங்களுக்குச் செல்ல ஒரு பேருந்து நிலையமும், சென்னை, சேலம், பெங்களூர் போன்ற ஊர்களுக்குச் செல்ல மற்றொரு பேருந்து நிலையமும் உள்ளன. தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டும் என்றால் ஆம்னி பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உடனே அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் . அதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சமூக ஆர்வலர் ஆரோக்கியசாமி கூறினார்.