July 31, 2022 தண்டோரா குழு
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிப்பதிலும் உறுப்புதான விழிப்புணர்விலும் தமிழகம் முன்னிலை வகிப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.இதில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,மாவட்ட ஆட்சியர் சமீரன்,கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் முதல்வர் சுப்பாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கௌரவிக்கும் விதமாக அமைச்சர்கள் நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுப்பிரமணியன் உடல் உறுப்பு தானம் என்பது தற்போது மிக அவசையமாக உள்ளது எனவும், கொரோனா காலகட்டத்தில் இந்த உடல் உறுப்பு தானம் தொய்வடைந்ததை அடுத்து தற்போது மக்களிடையே இது பற்றியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடல் உறுப்பு தானம் பற்றியான ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிப்பதிலும் உறுப்புதான விழிப்புணர்விலும் தமிழகம் முன்னிலை வகிப்பதாக தெரிவித்த அவர் கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடலுக்கு பின் உறுப்பு கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.