August 5, 2022 தண்டோரா குழு
கோவை டவுன்ஹாலில் உள்ள பூம்புகாரில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பல கண்காட்சிகளை நடத்திவருவதைப் போல இந்த ஆண்டும் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்கியது.
வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சி தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம் , கருப்பு மற்றும் வெள்ளை உலோகசிலைகள், தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ், களிமண் பொம்மைகள், துணி பொம்மைகள், கொண்டபள்ளி பொம்மைகள், நூக்கமர உட்பதிப்பு வேலைப்பாடு, பட்டு துணியில் வரைந்த ஓவியங்கள், மற்றும் எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில்,ரூ.85 முதல் 1.5 லட்சம் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும்,விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 % சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூபாய் 15 இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.