August 6, 2022 தண்டோரா குழு
தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தென் மண்டலத்தின் சார்பாக கலந்துகொண்டு வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் பதக்கங்ககளை ஆட்சியர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
கோவை மாவட்ட நிர்வாக உதவியுடன் தனியார் அமைப்புகள் இணைந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தடகள விளையாட்டிற்கான ஆட்தேர்வு கடந்த ஏப்ரல் 27ம் தேதி அன்று நேரு ஸ்டேடியத்தில் நடத்தியது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 773 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வெற்றி பெற்ற 79 மாணவர்கள் மே 8 மற்றும் 9ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தேர்வில் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவியர் சக்திஸ்ரீதேவி, தக்சிண்யா, ஸ்வேதா மற்றும் மாணவர்கள் கிரண், ரிஷி கண்ணன் ஆகியோர் ஜூலை 28ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், தென் மண்டலம் சார்பாக பங்கேற்றனர்.
மேலும் இப்போட்டிகளில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களான சக்திஸ்ரீதேவி பேட்மிண்டனில் தங்கப் பதக்கம், ஸ்வேதா உயரம் தாண்டுதல் வெள்ளி மற்றும் 4×100 ரிலேவில் தங்கப்பதக்கம், தக்சிண்யா நீளம் தாண்டுதல் தங்கப் பதக்கம், கிரண் குமார் டிரையலாத்தானில் வெள்ளிப் பதக்கம், ரிஷி கண்ணன் கேரமில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இவர்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.