August 9, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
75-வது சுதந்திரத்தின விழாவினை கொண்டாடும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தேசிய கொடியினை வீடுகளில் ஏற்றிய பிறகு அதனை பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். தேசிய கொடியினை புனித தன்மையை பேணும் வகையில் எந்தவித அலட்சியமும், அவமரியாதையும் இன்றி கையாளுதல் வேண்டும். தேசிய கொடிகளை திறந்த வெளியிலோ, குப்பை தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக் கூடாது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒத்துழைப்பு நல்கி 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.