August 10, 2022 தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை மற்றவர்களுக்கும் புரியவில்லை என்பதால் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
கோவை சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,
மதிமுக அரசியல் திசையை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது என்றும் தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பாக நடத்த மதிமுகவினர் உணர்ச்சியுடன் செயல்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். மதிமுக திமுகவுடன் சனாதனத்திற்கு எதிராக நின்று வருகிறது எனவும் ஏகாதிபத்திய பாசிச சக்திகளை வீழ்த்த திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் மு க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் எனவும் குறிப்பிட்டார்.திமுக தலைமையிலான ஆட்சி கொள்கை ரீதியிலான ஆட்சி என்றும் இது மதிமுக விற்கு மகிழ்ச்சியை தருகிறது என்றும் கூறியதுடன் தங்களுக்கிடையே நல்ல தோழமை மற்றும் நல்ல புரிதல் உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்புகள் போல எந்த மாநிலத்திலும் இல்லை என்றும் பெருமிதம் கொண்டார்.
மத்திய அரசு உணவு பண்டங்களுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிப்பதாகவும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் நாங்கள் திட்டவட்டமாக எதிர்ப்பதுடன் எல்லாரிடமும் சொல்லி வருகிறோம் என்றும் கூறினார்.மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு மீது மக்களுக்கு வெறுப்பு எழுந்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பேச விடாததால்தான் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனவும்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச விட வேண்டும் என வெங்கையா நாயுடு தெரிவிப்பது சரி தான் என்றும் கூறியதுடன் ஆளுங்கட்சி மெஜாரிட்டி இருப்பதால் கூச்சல் போட்டு பேசவிடாமல் செய்வதாகவும் வெங்கையா நாயுடு நடுநிலையோடு அரசியல் அனுபவத்தோடு சொல்லியுள்ளதை ஆளுங்கட்சி பின்பற்றினால் நல்லது எனவும் மேற்கோள் காட்டினார்.
மேலும் மத்திய அரசு வீடுதோறும் தேசிய கொடியை ஏற்ற சொல்வது நல்ல திட்டம் என்பதால் வரவேற்பதாக கூறிய வைகோ ,நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை மற்றவர்களுக்கும் புரியவில்லை எனவும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் நகைப்புடன் தெரிவித்தார்.