August 12, 2022 தண்டோரா குழு
டிசம்பர் 2018 – ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ 2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் தவறாக பில் அனுப்பி இருந்தது. ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 ஆக இருக்கும் நிலையில் இந்த கட்டண விதிப்பு தவறானது என பி.எஸ்.என்.எல்லிடம் ஈஷா முறையிட்டது. இதற்கு முன்பு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஈஷா யோகா மையத்தின் மாதந்திர தொலைபேசி கட்டணம் வெறும் ரூ.22,000-க்கும் குறைவாகவே இருந்துள்ளது.
ஆனால், மேற்குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என பி.எஸ்.என்.எல் அச்சுறுத்தியதால், ஈஷா யோகா மையம் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி. பத்மநாபன் அவர்களை தனி நபர் ஆர்பிட்ரேட்டராக நியமித்து இதனை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின் முடிவில் பி.எஸ்.என்.எல்லின் வாதத்தை ஏற்க மறுத்த ஆர்பிட்ரேட்டர் திரு.பத்மநாதன் அவர்கள், டிசம்பர் 2018 – ஜனவரி 2019 ஆகிய இரண்டு மாதங்களுக்கு சராசரி மாத கட்டணமாக தலா ரூ.22,000 செலுத்த உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.எஸ்.என்.எல் மேல் முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விசாரணையிலும் மீண்டும் நீதி நிலை நிறுத்தப்படும் என ஈஷா நம்பிக்கை தெரிவித்துள்ளது.