August 26, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன் பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. ராமகிருஷ்ண மிஷன் முதல் வண்ணான்கோவில் வரை சுமார் 1.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து வண்ணான்கோவில் வரை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வாகனங்கள் வண்ணாண்கோவில் அருகே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் வண்ணான் கோவில் பகுதியில் இறங்குதளம் அமைக்க தேவைப்படும் பகுதியில் சாலையில் இருபுறமும் சாலையின் நடுவே சுரங்க குழாய்கள் மூலம் சாக்கடை வடிகால்கள் செல்கின்றன.
இந்த சாக்கடை வடிகால்களுக்கு பாதிப்பு இல்லாமல் புதிதாக கான்கீரிட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்காக திட்டமிடப்படாமல் வண்ணான் கோவில் அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஜோதிபுரம் பகுதியில் கோவை-மேட்டுப்பாளையம் 4 வழிச்சாலையில் ஜோதிபுரத்தில் இருந்து வண்ணான் கோவில் செல்லும் சாலை மட்டும் முழுவதுமாக பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டு வேறு வழியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
ஏற்கனவே வண்ணான்கோவில் வழியாக செல்லும் மாற்றுப்பாதைக்கு மாற்றாக இன்னொரு மாற்றுப்பாதை அதன் அருகிலேயே உள்ளது. அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லமுடியாது. ஆனால் இருசக்கர வாகனங்கள் செல்லலாம். அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லலாம். இந்நிலையில் இருசக்கர வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தாமல் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதில் ஆம்புலன்ஸ் சிக்கி தவிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
‘‘ மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வாகனங்கள் வேறு வழியில் செல்ல திடீரென ஜோதிபுரம் நால்ரோடு ஜங்கசனின் ஒருபுறம் மட்டும் முழுவதுமாக பேரிக்கார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 மீட்டர் தூரம் வரை அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிப்பவர்கள், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் சென்று வர வழி இருந்தும் அதனை கண்டுகொள்ளாலம் அவசர கதியில் திட்டமிடப்படாமல் ஜோதிபுரம் பகுதியில் வழி அடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக இருசக்கர வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு வழி ஏற்படுத்தி பேரிகார்டுகளை அமைக்க வேண்டும்,’’ என்றனர்.