August 30, 2022 தண்டோரா குழு
கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுடன் காபி வித் கமிஷனர் என்ற தலைப்பில் கலந்துரையாடி செய்தியாளர்களை சந்தித்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக அரங்கத்தில் கோட்டைமேட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் பீளமேடு மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுடன் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்.
இந்த கலந்துரையாடலில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த காவல் ஆணையாளர் மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கவும், குற்றங்களால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் எப்படி வாழ வேண்டும் என அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது,
கோவை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த உரையாடலின் போது மாணவர்களின் வாழ்க்கை குறிக்கோள்கள், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், குழந்தைகளின் மீது நடைபெறும் பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றின் அறிமுகம் கொடுக்கப்பட்டது.
மாணவர்கள் எதிர்காலத்தில் குற்றமில்லாத வாழ்க்கையையும், குற்றத்தால் பாதிக்கப்படாத வாழ்க்கையையும் எப்படி வாழ வேண்டும் என விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகள் இனி தொடர்ந்து நடைபெறும். காஃபி வித் கமிஷனர் என்ற பெயரில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்கு 500 விநாயகர் சிலைகளுக்கு மாநகர காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் மாநகர காவல் துறை சார்பில் 1500 காவலர்கள் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று முதலே பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர்மாநகரில் உள்ள 11 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர் என்றும் ஊர்வலம் முதல்
விநாயகர் சதுர்த்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கேமரா மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நேற்று முன்தினம் சிங்காநல்லூர் பகுதியில் திருநங்கைகள் வழிப்பறி செய்ததாக இருந்த புகார் மீது ஆறு திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.திருநங்கைகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மாநகர காவல் துறை செயல்பட்டு வருகிறது.திருநங்கைகள் தொடர்பான பல புகார்கள் வந்ததின் அடிப்படையில் இரண்டு முறை கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கினோம்.
திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
இப்படி அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கியும் மீறி செயல்படும் திருநங்கைகள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறோம் என தெரிவித்தார்.