September 1, 2022
தண்டோரா குழு
கோவையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணியளவில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிற்காமல் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் ஆறு போல் ஓடியது.
குறிப்பாக மாநகரப் பகுதிகளான காந்திபுரம், ரயில்நிலையம், உக்கடம் ,பீளமேடு, ராமநாதபுரம், சிட்ரா, காளப்பட்டி ,சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான வடவள்ளி, தடாகம், கணுவாய், சோமையனூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கிதால் ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
குறிப்பாக கோவை- ஆனைகட்டி சாலையில் உள்ள தடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை காரணமாக சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.