September 5, 2022 தண்டோரா குழு
சேலம் கோட்டத்தில் 9 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், டிக்கெட் இல்லாமல் ரயிலில் சென்ற 637 பேர்களிடம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் 9 ரயில்களில் கடந்த மாதம் 29ஆம் தேதி, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையானது, சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம்இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில், ஈரோடு – பாலக்காடு டவுன் மெமு ரயில், ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், கோர்பா – கொச்சுவேலி விரைவு ரயில், மங்களூரு சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்,சென்னை சென்ட்ரல் – கோவை விரைவு ரயில், சென்னை – மங்களூரு விரைவு ரயில், ஈரோடு – திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் ஆகிய 9 ரயில்களில்
நடைபெற்றது. 21 பயணச்சீட்டு பரிசோதகர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, சேலம்கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சேலம், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், கரூர்உள்ளிட்ட பகுதிகளில், ரயில்களில் 21பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில், டிக்கெட் இல்லாத பயணிகள், தடை செய்யப்பட்ட பொருள்களை ரயில்களில் கொண்டு சென்றவர்கள், வகுப்புகள் மாற்றி பயணிப்பவர்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ஆகஸ்ட் 29ம் தேதி மட்டும், டிக்கெட் வாங்காமல் ரயில்களில் பயணித்த
637 பேர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டது, என்றார்.