September 7, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நஞ்சே கவுண்டர் வீதி,டிவிஎஸ் நகரில் தனியார் ஆஸ்பெஸ்டாஸ் தொழில் நிறுவனமும், தனியார் இன்ஜினியரிங் தொழில் நிறுவனமும் செயல்பட்டு வந்தன. தனி நபர் ஒருவரின் புகாரின் பெயரில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த 2 தொழில் நிறுவனங்களும் இயங்க தடை விதித்து சீல் வைத்தனர்.
மேலும் இயந்திரங்களை வெளியில் வைத்து சீல் வைத்துள்ளதால் இயந்திரங்கள் மழையில் நனைந்து வருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சிறு,குறு தொழில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரனிடம் 2 தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்கக்கோரி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் சிறு, குறு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.
இது குறித்து ஜேம்ஸ் கூறுகையில்,
குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைத்தது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக கலெக்டர் கூறும் பொழுது மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய அனுப்புகிறேன். அவர்கள் ஆய்வுக்கு பின் அளிக்கும் அறிக்கை பெற்ற பின் நடவடிக்கை எடுக்கிறேன்.
அதனை தொடர்ந்து குறுந்தொழில் முனைவோர்களும் உன்மை நிலை அறிந்து உதவிட கோரிக்கை வைத்துள்ளோம். மக்களுக்கு இடையூறு எதுவும் இல்லாத பட்சத்தில் தனி நபர் ஒருவரின் புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது எங்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. மக்களுக்கு இடையூறு இல்லை என்றால் உடனடியாக தொழில்நிறுவனங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார் என்றார்.