January 4, 2017 தண்டோரா குழு
பிஜி தீவில் 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் புதன்கிழமை(ஜனவரி 4) ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பிஜி நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள நாடி என்னும் நகரிலிருந்து 227 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல்பகுதியில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரத்தின்படி காலை 1௦ மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. உடனே, சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பிஜி நாட்டின் சுற்றுலா நகரமான நாடி சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாகும். நில நடுக்கத்தை அடுத்து, அங்கிருந்து சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.