September 12, 2022 தண்டோரா குழு
கோவையில் வீட்டுமனை பட்டா கேட்டு 300க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வின்சென்ட் ரோடு பகுதியில் வசித்து வந்த 350 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அவர்கள் குடியிருந்து வந்த ஹவுசிங் யூனிட் கட்டிடம் ஆனது பூமிக்குள் புதையுண்டு பெரும் விபத்துக்குள் ஆனது.அதை அடுத்து அப்போதைய திமுக அரசு 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்களையும் ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில் அந்தப் பகுதியில் குடியிருந்த மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி தராமல் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.மேலும் கடந்த 15 ஆண்டுகளாக இருப்பிடம் இன்றி வாழ்வாதாரம் இழந்து வருவதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் 15 வருடங்களாக வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உடனடியாக மாநில அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மாற்று வீடு ஒதுக்கி உதவிட வேண்டும் என்று மாநில அரசிடம் கேட்டுக்கொண்டார்.