September 13, 2022 தண்டோரா குழு
கோவையில் முதல் முறையாக சர்வதேச பவுண்டரி கண்காட்சி கொடிசியா வளாகத்தில் வரும், செப் 15 முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது,
கோவையில் பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன், சார்பாக, இன்டர் பவுண்டரி, இன்டர்டைகாஸ்ட் கண்காட்சி வரும் செப்டம்பர் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள், கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன், துணை தலைவர் கிருஷ்ணா சாம்ராஜ் மற்றும் இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பழனிசாமி கூறியதாவது,
கோவையில் சுமார் 600 பவுண்டரிகள் உள்ளது. இதன் மூலம் சுமார் 15,000 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகின்றது. நமது நாட்டில் தயாரிக்கப்படும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் அனைத்திலும் கோவையில் உள்ள பவுண்டரிகளில் செய்யப்படும் பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தொழில் துறைகளின் காஸ்டிங் தேவைகள், வாகன உற்பத்தி, ஜவுளி, சுரங்கம், கட்டுமானம், இயந்திர கருவிகள், எண்ணெய் எரிவாயு, மின் உற்பத்தி, பம்புகள், மோட்டார்கள் போன்றவற்றிக்கு தேவைப்படும் பாகங்கள் ஆகியவை கோவை பவுண்டரிகளில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் 88% பவுண்டரிகளில் இரும்பு தொடர்பான பாகங்களும், 10 % பவுண்டரிகளில் எஃகு தொடர்பான பாகங்களும், மற்றவைகளில் இரும்பு அல்லாத பொருட்களும் தயார் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
பவுண்டரி தொழில்நுட்பங்கள் குறித்தும், அதன் உற்பத்தி மற்றும் தரத்தை பவுண்டரி தொழிலாளர்களிடம் அதிகரிக்கும் வகையில், தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பவுண்டரி மற்றும் அதுசார்ந்த உபகரணங்கள் குறித்த சர்வதேச கண்காட்சி கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
பவுண்டரி தொடர்பான அனைத்து உபகரணங்களும், பொருட்களும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சர்வதேச அளவில் இருந்து 180 முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெறுகின்றன. அதில் 60 நிறுவனங்கள் கோவையிலிருந்து பங்கு பெறுகின்றன. மேலும் ஜெர்மனி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட மேலை நாடுகளும் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சிக்கான வேலைகள் கடந்த ஒரு வருடமாகவே நடைபெற்று வந்ததாக தெரிவித்தனர்.