September 16, 2022 தண்டோரா குழு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா . க .ரவி இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில்,
இந்தியா சுதந்திரம் பெற்ற போது 10 – ல் 2 பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 2022 – ல் இந்தியாவின் எழுத்தறிவு சதவிகிதம் 77.7 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம் 82.9 சதவிகிதம் இதில் ஆண்கள் 87.9 சதவிகிதம் பெண்கள் 77.9 சதவிகிதம் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இந்தியாவில் உயர்கல்வியின் மொத்த சேர்க்கை விகிதம் 27.1 சதவிகிதமாக உள்ளது . ஆனால் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் மொத்த சேர்க்கை விகிதம் தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக அதாவது 51.4 சதவிகிதமாக உள்ளது என்று குறிப்பிட்டார் . அவர் மேலும் பேசுகையில் உலகில் குறிப்பாக ஐஸ்லாந்து , நார்வே , ஸ்வீடன் , டென்மார்க் , சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் 100 சதவிகிதம் எழுத்தறிவை பெற்றுள்ளன . வடகொரியா , கியூபா போன்ற நாடுகள் விவசாயம் , மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதற்கு காரணம் கல்வியறிவு மட்டுமே.
கல்வியறிவு என்பது பாடத்தோடு பொது வாழ்க்கைக்கு தேவையானவற்றையும் அறிந்து படிப்பது தான் என்றும் தெரிவித்தார் . உலகின் மிகப்பெரிய பணக்கார நாடுகளின் வரிசையில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது . அதற்கு காரணம் அவர்களது கடின உழைப்பும் தரமான கல்வி முறையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார் .
இந்நிகழ்வில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வி.திருவள்ளுவன் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில்,
யாரை மன்னித்தாலும் நன்றி மறந்தவர்களை மட்டும் மன்னிக்க கூடாது.மாணவர்களிடம் நன்றி ,விசுவாசம் அவசியம் இருக்க வேண்டும். எப்போதும் நல்லவர்களாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். மனத்தூய்மை மிக மிக அவசியம்.அனுபவம் தான் வாழ்க்கை. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சூளுரையை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் . படிப்பு என்பது ஒரு வரம் அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் வாசிப்பை தினசரி வழக்கமாக கொள்ள வேண்டும்.
நிறைய நூல்களை படிக்க வேண்டும் . உள்மனதை அடக்கி ஆள்பவர்களே அறிஞர்களாக உருவாகிறார்கள்.ஆதலால் மாணவர்களே வாசியுங்கள், வாசியுங்கள் வசந்தம் உங்களைத் தேடி வரும் என்று குறிப்பிட்டு பேசினார் . அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவின் முதன்மையர் பேரா.அ.நாராயணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
அவர் தமது உரையில் ,
கல்வியறிவு இல்லாமல் எந்த வளர்ச்சியும் இருக்காது.கல்வியறிவு வளர்ச்சியடைந்தால் நாடு அனைத்து துறைகளிலும் தானாக வளர்ச்சியடையும்.ஆதலால் மாணவர்கள் நூலகங்களுக்குச் சென்று நிறைய நூல்கள் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் .
முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறைத்தலைவர் பேரா . எஸ்.தனுஷ்கோடி வரவேற்புரையாற்றினார்
நிறைவாக உதவி பயிற்றுநர் முனைவர் முத்துமாரி நன்றி கூறினார்.