September 19, 2022 தண்டோரா குழு
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகுதிகளில் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் உரிய அறிவிக்கை இல்லாமல் விற்பவர்கள், பதிவுச்சான்று பெறாதவர்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் எடையளவு சட்டத்தின் கீழ் மின்னணு தரசில் எடைகுறைவு, முத்திரையிடப்படாத தரசு உள்ளிட்டவைகள் தொடர்பாக மொத்தம் 156 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் முரண்பாடு கண்டறியப்பட்ட 51 தொழில் நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், பொட்டலமிடுபவர்கள், விற்பனையாளர்கள் நுகர்வோர் நலன் கருதி தயாரிப்பாளர், பொட்டலமிடுபவரின் பெயர், முழு முகவரி, பொட்டலப் பொருளின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட மாதம், வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண், உள்ளிட்ட விபரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வணிகர்கள் அனைவரும் தமது எடையளவைகள் மற்றும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடை நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.