September 22, 2022 தண்டோரா குழு
தொண்டமுத்தூரில் விவசாய நிலங்களில் வெறும் இரண்டே மாதத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கம் தேசத்திற்கே முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது” என பொள்ளாச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியின் நிறைவு விழா கோவை மத்திபாளையத்தில் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொள்ளாச்சி எம்.பி விழாவில் பேசியதாவது:
விவசாய நிலங்களுக்காகவும், தொழிற்சாலைகளை அமைப்பதற்காகவும் உலகளவில் காடுகளை அழிக்கும் துயரம் நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி ஹெக்டேர் முதல் 1.8 கோடி ஹெக்டர் வரை காடுகள் அழிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் 2,400 மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் வாழ்வியல் மாற்றங்களையும் நாம் சந்தித்து வருகிறோம்.
இதை கருத்தில் கொண்டு, எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் குறைந்தப்பட்சம் 33 சதவீதம் பசுமை பரப்பை பேண வேண்டும் என ஐ.நா வலியுறுத்தி உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக முயற்சித்தும் நம்மால் அந்த இலக்கை இன்னும் அடையவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் 21.71 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் ஆண்டுக்கு சராசரியாக 0.04 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது. சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்படும் ஒரு மரத்திற்கு 10 மரங்களை நட வேண்டும் என சட்டம் உள்ளது. அதை செயல்படுத்துவதிற்கே நெடுஞ்சாலைத் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், காவேரி கூக்குரல் இயக்கமும், ரோட்டரி சங்கமும் இணைந்து தொண்டாமுத்தூரில் விவசாய நிலங்களில் வெறும் இரண்டே மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருப்பது பாராட்டுக்குரியது.இதன்மூலம், காவேரி கூக்குரல் இயக்கம் தேசத்திற்கே முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது. இத்திட்டத்தை தொண்டாமுத்தூர் மட்டுமின்றி கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திட்ட விளக்க உரை ஆற்றிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில்,
“எங்களுடைய பல ஆண்டு அனுபவத்தின் படி, பொது இடங்களில் நடப்படும் மரங்கள் பல்வேறு காரணங்களால் 10 சதவீதம் கூட மரமாக வளர்ந்து உயிர் பெறுவது கிடையாது. இதனால் தான் நாங்கள் விவசாயிகளின் நிலங்களில் மரங்களை நடும் பணியை மேற்கொண்டு வருகிறோம். விவசாய நிலங்களில் நடப்படும் மரக்கன்றுகளில் 90 சதவீதத்திற்கும் மேற்ப்டடவை மரங்களாக வளர்ந்து பயன் அளிக்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படுகிறது.
எங்களுடைய களப் பணியாளர்கள் தொண்டாமுத்தூரில் ஒவ்வொரு கிராமமாக சென்று இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். ஒரு லட்சம் மரங்களை நடுவதை இலக்காக வைத்து எங்களது பணியை தொடங்கினோம். ஆனால், 3 லட்சம் மரங்களை நடுவதற்கு விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது இத்திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி” என்றார்.
ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர் பேசுகையில்,
“தொண்டாமுத்தூரில் ஒராண்டில் ஒரு லட்சம் மரங்களை நட வேண்டும் என்பதை இலக்காக வைத்து இத்திட்டத்தை தொடங்கினோம். ஆனால், காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்களின் தீவிர செயல்பாட்டால், கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்று (செப்டம்பர் 22) நிறைவு பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி இவ்வியக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாயிகளின் தேவை, மண் மற்றும் நீரின் தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ற மரங்களை பரிந்துரைத்துள்ளனர். மேலும், மரக்கன்றுகளை முறையாக நடும் வழிமுறைகளை சொல்லி கொடுத்துள்ளோம். இத்திட்டத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
இவ்விழாவில் தொண்டாமுத்துர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அரவிந்த் ஆறுசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். ரோட்டரி சங்கத்தின் மாவட்ட இயக்குநர் மயில்சாமி, துணை கவர்னர் சஞ்சய் ஷா, மண் காப்போம் இயக்கத்தின் பிரதிநிதி வள்ளுவன், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார் உட்பட ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக, விவசாயி காந்தி பிரகாஷ் அவர்களின் நிலத்தில் டிம்பர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்