September 26, 2022 தண்டோரா குழு
கோவையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,
இந்த இடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சிறைக்குள் இருக்கிறார் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி. இன்று ஆயிரம் பாலாஜிகள் திரண்டு வந்து இருக்கிறீர்கள். சரித்திர கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல் துறை ஏவல் துறை போல நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
ராசா பேசிய பேச்சுக்கள் திமுகவிற்கு புதிதல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுக்களை சகோதர சகோதரிகள் எதிர்த்துள்ளனர். சமூக வலைதளம் உள்ள காலத்தில் வீட்டில் இருக்கும் ஒரு சகோதரி உடனடியாக அந்த பேச்சை பார்த்து விடுகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு எதிர்ப்பு இல்லை. இப்போது தமிழர்கள் உங்கள் பேச்சுக்களை பார்க்கிறார்கள்.
அறிவாலயத்தில் ஒரு பிரச்சனையை மறைக்க அடுத்த பிரச்சனை என்ன செய்யலாம் என திமுக தலைவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். 15 மாத காலமாக தஞ்சாவூர் முதல் கனியமூர் பள்ளி வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு வாய்திறக்கவில்லை. அந்த பிரச்சனை குறித்து பாஜகதான் பேசுகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு பிரச்சனைக்காக பா.ஜ.க தொண்டன் பேராடுகிறான்.கோவையில் பயங்கரவாதிகள், ஆ.ராசா கருத்துக்கள் மற்றும் காவல் துறை அத்துமீறலை கண்டித்து வருகிறோம். அப்போது தடியடி நடத்தும் காவல்துறையிடம் மாட்டிக்கொள்ளும் தொண்டனும் உள்ளான்.
பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐயை சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. நாங்கள் போட்ட பிச்சையில் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அதனால் எங்கள் மீது கைவைக்கமாட்டார்கள் என்று நினைத்தால் அது நடக்காது.
கேரளா வல்லபுரத்தில் தவறு செய்த குற்றவாளிகளை, என்.ஐ.ஏ இந்திய விமானப்படை விமானத்துடன் சென்று கைது செய்தது. எனக்கு சி.ஆர்.பி.சி மற்றும் ஐ.பி.சி சட்டங்கள் தெரியும். 11 ஆண்டுகள் அதில் வாழந்திருக்கிறேன். கேரளாவை போல் இங்கு இருக்கிற தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடக்கும் என்பதை முதலமைச்சர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
முதலைமச்சர் நான் கடவுள், நான் கடவுள் என்று சொல்லி வருகிறார். அவரை நம்பக்கூடிய நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள் . ஆத்துல குளிச்சுகிட்டு சேத்துல நடந்துவர்றவனை பார்த்து நாங்க நகர்ந்து செல்கிறோம். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு கனவு கொண்டிருக்கிறோம்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான 1கோடியே 10 லட்சம் பேரை மீட்டு கொண்டு வர ஆட்சிக்கு வர நினைக்கிறோம். தாலுக்கா மற்றும் அரசு அலுவலகங்களில் எம்.எல்.ஏ.க்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதை தடுக்கவும், கனிமவள கொள்ளை தடுக்கவும் ஆட்சிக்கு வர நினைக்கிறோம். விவசாயம் செய்ய நிலத்தை அதிகரிப்போம் என சொன்ன திமுக இதுவரை எதுவும் செய்யவில்லை.
கோவை மாநகராட்சியில் 3327 கோடி வரிகள் மூலம் வருமானம் வருகிறது. மேலும் 350 கோடி சொத்துவரி உயர்வால் கிடைத்துள்ளது.
அமைச்சர்கள் பெண் மேயரை அடிமையாக நடத்துகிறார்கள். வீட்டில் வேலை பார்ப்பவரை போல் பெண் மேயரை ஒருமையில் அழைக்கிறார்கள்.
பேருந்தில் ஓசியில் போகிறீர்கள் தானே என்று அமைச்சர் பொன்முடி பேசுகிறார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக , பாஜக நிர்வாகிகளை கைது செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.திமுக எம்.எல்.ஏ தாம்பரத்தில் தொழிலதிபரை மிரட்டியவரை சம்பவத்தில் அவர் மீது எப்.ஐ.ஆர் மட்டும் போட்டு விட்டு விட்டார்கள். ஆனால் அவரை கைது செய்யவில்லை.
கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் கலெக்ஷன், சோலார் மின் சாரம் போட கமிஷன்,மாநகராட்சி டெண்டர்களுக்கு கமிஷன், தென்னை நார் தொழிற்சாலைகளை ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்றிவிட்டு அதிலும் கமிஷன் , கட்சிக்குள் பதவி வாங்க பணம், ஏற்றிய மின்சார கட்டணத்தை குறைக்க காசு, என கோவை சொத்தை சுரண்டி சுரண்டி கோபாலபுர குடும்பத்தை வளப்படுத்த நினைக்கிறார்.
கடந்த 1966ம் ஆண்டு ராமாயணம் எதிர்ப்பு போரட்டம் நடத்தினர். ராமனை வைத்து அடுத்த 15 ஆண்டுகள் அரசியல் செய்தனர். இன்றைக்கு உலகம் முழுவதும், கம்பன் கழகம் இருக்கிறது அதற்கு காரணம் திமுக தான். அதே போல சனாதன தர்மத்தை பட்டி தொட்டியெல்லாம் திமுகவினர் கொண்டு செல்கிறார்கள். இப்போது சனாதன தர்மத்தின் மீது கைவைத்திருக்கிறார்கள்.
எங்கள் மீது கைவைத்த காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் பணி ஓய்வு பெறும் போது பென்சன் பணம் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் பொறுப்பல்ல. 99 சதவீத காவலர்கள் நேர்மையானவர்கள். ஆளும் அரசுக்கு அடிமையாக இருக்க மாட்டேன் என்று கூறும் காவல்துறையினரும் உள்ளனர். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.
வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள். பா.ஜ.க தொண்டர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவார்கள். அதனை செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. முதலமைச்சர் நடுநிலையாக நடந்துகொள்ளும் வரை பாஜக விடாது. ஐந்தாண்டுகள் ஆட்சியை நல்லபடியாக முடித்துவிட்டு செல்லுங்கள். நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது.