September 28, 2022 தண்டோரா குழு
ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம் அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைத்தால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம் எனவும் இந்த சரிவில் இருந்து ஒரு போதும் மீள முடியாது என பாஜக மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாஜகவின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பார்த்து விட்டு சிறைச்சாலை முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஒரு சட்டம் இயற்றப்படுவது மக்களுக்கான பாதுகாப்பை தருவதற்கு தான் தீண்டாமைக்கு எதிராக பி சி ஆர் சட்டம் இயற்றப்பட்டது. காலம் காலமாக இருந்து வருகின்ற வன்கொடுமையான மனிதனை மனிதன் தீண்டாதவனாக நடத்துகின்ற போக்கை மாற்ற வேண்டும் என்பதற்காக, ஆனால் அப்படிப்பட்ட ஒரு சட்டத்தையே ஒரு அரசே தவறாக பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கத்தை சார்ந்த தலைவர்களை கைது செய்துள்ளது.இந்திய பாரத வரலாற்றில் இதுவே முதன்முறை என்றார்.
மாநில அரசு பி சி ஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பிஜேபினுடைய கோவை மாநகர் மாவட்ட தலைவர் உத்தமன் பாலாஜி அவர்களை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு அரசே சட்டத்தை தவறாக பயன்படுத்துகிற போக்கு என்பது மக்களுக்கு பாதுகாப்பு பெற்ற சூழலை உருவாக்கிவிடும்.ஆ ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம் அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பாரே ஆனால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம்.இந்த சரிவில் இருந்து ஒரு போதும் மீள முடியாது.
ஒவ்வொரு தமிழிச்சியின் தன்மானத்தை காக்க உள்ளே இருந்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியோடு பாஜகவினர் சிறையில் உள்ளனர்.முதல்கட்டமாக ஒரு அமைப்பை தடை செய்துள்ளது. ஒரு தேச விரோத அமைப்பு யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பறைசாற்று கொண்டிருக்கும் அமைப்பு சமூகத்தினுடைய ஒற்றுமைக்கு நலன் இல்லை.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் பாப்புலர் பிரண்ட் ஆப் பாகிஸ்தான் ஆக தான் இந்த மண்ணில் செயல்பட்டு வந்தது. தடை செய்யப்பட்டது மிகுந்த வரவேற்கத்தக்கது.இவர்களோடு தொடர்பு உள்ளவர்கள் வருங்காலத்தில் வருத்ததிற்கு
உள்ளாவார்கள் என தெரிவித்தார்.