September 29, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாநகராட்சி அனைத்து சாலைகளிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சித்ரா முதல் காளப்பட்டி வரை, சிங்காநல்லூரில் இருந்து ஹோப்காலேஜ் வரை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால், நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.
உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பரில் பார்சல் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கோவையில் உணவு கலப்படங்கள் அதிகரித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகத்தில் தேவையான ஓட்டுநர், நடத்துனர் இல்லாததால் ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வருவாய், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சியர், அந்தந்த துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.