October 10, 2022 தண்டோரா குழு
உயிர் அமைப்பு கோவையின் குடிமக்களால் ‘சாலை பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்’ என்ற நோக்கில் ஒரு அறக்கட்டளையாக நிறுவப்பட்டது. சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தலைவராகவும், கங்கா மருத்துவமனையின் டாக்டர் எஸ் ராஜசேகரன் நிர்வாக அறங்காவலராகவும் கொண்ட உயிர் அறக்கட்டளையில் 12 அறங்காவலர்கள் மற்றும் 10 உயர்மட்ட கமிட்டி உறுப்பினர்களும் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்,காவல்துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இந்த அமைப்பின் அலுவல் சாரா அறங்காவலர்களாக உள்ளனர். உயிர் அமைப்பானது நகரில் சாலைப் பாதுகாப்பிற்காக மகத்தான செயல்பாடுகளைச் செய்துள்ளது.
மேலும்,நேரடியாக பள்ளி மாணாக்கர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வியை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே ‘குட்டி காவலர்’ திட்டமாகும். முதலில் ஒரு சோதனை திட்டமாக சுமார் 40 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட இப்பாடத்திட்டம் தமிழக அரசின் அனுமதியுடன் நடப்பு 2022-23-ஆம் கல்வி ஆண்டு முதல் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
‘குட்டி காவலர்’ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி திட்ட துவக்க விழாவினை வரும் புதன்கிழமை காலை 10.15 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னையிலிருந்து துவக்கி வைக்க உள்ளார்கள்.
இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் தலைமையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை சார்ந்த சுமார் 4.50 லட்சம் மாணாக்கர்கள் குட்டி காவலர் உறுதிமொழியினை ஏற்க உள்ளார்கள். இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வானது ஒரு உலக சாதனை நிகழ்வாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வின் நேரலையில் கோவை கொடிசியா வளாகத்தில் சுமார் 4 ஆயிரம் மாணாக்கர்கள் கோவை மாநகரின் பல்வேறு பள்ளிகளிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் த வி. செந்தில்பாலாஜி பங்கேற்க உள்ளார்கள்.
மேலும்,‘குட்டி காவலர்’திட்டத்தின் கீழாக 3 முதல் 5-ஆம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் அடங்கிய ஆசிரியர் விளக்கக் கையேடுகளையும், மாணாக்கர் பயிற்சி புத்தகங்களையும் முதல்வர் வெளியிட உள்ளார்.