October 14, 2022 தண்டோரா குழு
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி (42). தி.மு.க பிரமுகரான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரேஸ்கோர்சில் ஷூலா ராஜசேகர் என்ற பெண்ணிடம் ரூ.3 கோடியே 10 லட்சத்திற்கு வீட்டை விலைக்கு வாங்கினார். அதற்கு ரொக்க பணமாக ரூ. 10 லட்சமும், ரூ.1 கோடியே 88 லட்சம் பணத்தை ஷூலாவின் கணவர் ராஜசேகர் வங்கி கணக்கிலும், ரூ. 1 கோடியே 12 லட்சம் ஷூலாவின் பணத்தை வங்கி கணக்கிலும், ரெப்கோ வங்கியில் லோன் மூலம் செலுத்தினார்.
முழுபணமும் பெற்று கொண்ட பின்னர் ஆறுமுகபாண்டிக்கு ஷூலா ராஜசேகர் கிரயம் செய்து கொடுத்தார். இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 2018-ம் ஆண்டு ஆறுமுகபாண்டி மீது ஷூலா ராஜசேகர் முறைகேடாக சொத்தை கிரயம் செய்ததாகவும், பணம் என் கைக்கு வரவில்லை என்றும், என் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் அத்து மீறியதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து அந்த சமயத்தில் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆறுமுகபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் 20 நாட்கள் சிறையில் இருந்த ஆறுமுகபாண்டி, ஜாமீனில் வந்த பின்னர் அவ்வழக்கினை முறைப்படி கோர்ட்டில் தாக்கல் செய்தார்.கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கினை விசாரித்த 5-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதி என். ராமகிருஷ்ணன் வழக்கினை குறுக்கு விசாரணை செய்தார். விசாரணையில், அந்த பெண் அவரது வீட்டில் புகுந்து தன்னை ஆறுமுகபாண்டி கையை பிடித்து இழுத்ததாக கூறிய நேரத்தில், அவர் வங்கியில் இருந்ததும், அந்த நேரத்தில், அவர் எப்படி அப்பெண்ணின் வீட்டில் இருந்திருக்க முடியும் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் ஷூலாவின் கணவர் ராஜசேகரின் வங்கி கணக்கில் ஆறுமுகபாண்டி ரூ.1 கோடியே 88 வட்சம் ரெப்கோ’ வங்கியின் மூலம் செலுத்தியதும். ஷூலாவின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 12 லட்சம் செலுத்தியதும் தெரியவந்தது.எனவே இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை முன்னிறுத்தி இந்த வழக்கினை ரத்து செய்து, ஆறுமுகபாண்டி நிரபராதி என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.