January 6, 2017 தண்டோரா குழு
போர்ச்சுக்கல் பிரதமர் அந்தோனியோ கோஸ்ட்டா அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு சனிக்கிழமை வருகிறார்.
ஒரு வாரம் பயணம் மேற்கொள்ளும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியில் சனிக்கிழமை (ஜனவரி 7) சந்தித்துப் பேசுகிறார். அத்துடன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரையும் சந்திக்கிறார்.
போர்ச்சுக்கல் பிரதமரின் இந்தியப் பயணத்தின்போது, இந்திய – போர்ச்சுக்கல் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வலுப்படும் வகையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் கோஸ்டாவுடன் அவரது அமைச்சர்களும் இந்தப் பயணத்தில் இடம்பெறுகிறார்கள்.
பிரதமர் கோஸ்டா பெங்களூரில் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘பிரவசி பாரதீய திவாஸ்’ நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இந்திய வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் இருக்கும் இந்திய சமூகத்தின் பங்கேற்பை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. அத்துடன் சில அரசு அலுவல் நிகழ்ச்சிகளிலும் போர்ச்சுக்கல் பிரதமர் பங்கேற்கிறார்.
இதை தொடர்ந்து, கோஸ்ட்டா குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜனவரி 1௦ ம் தேதி நடைபெறவிருக்கும் குஜராத் மாநாட்டில் கலந்து கொள்வார். இறுதியாக, ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி கோவா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதலமைச்சரை சந்திக்கவுள்ளார்.
கோவா போர்ச்சுக்கல் நாட்டு காலனியாக பல ஆண்டுகள் இருந்தது. தற்போதைய போர்ச்சுக்கல் பிரதமர் அந்தோனியோ கோஸ்ட்டாவின் மூதாதையர் கோவாவில் வசித்தனர். அவர்களது இருப்பிடத்துக்கும் போர்ச்சுக்கல் பிரதமர் செல்ல இருக்கிறார்.