October 21, 2022 தண்டோரா குழு
கோவை குனியமுத்தூரை சேர்ந்த 55 வயது முதியவர் சாம்சுதீன்.இவர் எலக்ட்ரீசியன் ஆக பணி புரிந்து வருகிறார்.கடந்த 18-ம் தேதி நட்டை வாயில் வைத்த படி வேலை செய்து கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அந்த போல்டு நட்டை விழுங்கியுள்ளார்.இதனால் அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சக தொழிலாளர்களிடம் தெரிவித்ததையடுத்து உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து மார்பில் எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர். அதில் அவர் விழுங்கிய நட்டு இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில், மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் மருத்துவர் அலிசுல்தான் தலைமையில் மருத்துவர்கள் சரவணன், மயக்கவியல் துறை மணிமொழி, செல்வன், மதனகோபாலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து சாம்சுதினுக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து நட்டை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
கோவையில் இரும்பு நட்டை விழுங்கி ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு உடனடியாக சிகிச்சை கொடுத்து வெற்றிகரமாக நட்டை அகற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.