October 25, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியற்றவர்களுக்கு மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
இந்த உதவித்தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
2022-ம் ஆண்டு டிசம்பர்-31-ம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அலுவலக நாட்களில் நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்